ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

மள்ளர்


        மடையரு மகளிரு மல்லரு மமைச்சரும்
           கடையருங் கணக்கருங் காப்பரு முளப்பட
           இறைவினை திரியாப் பழவினை யாளரை
           வழிமுறை மரபிற்றந் தொழின்முறை நிறீஇ
     85 வாய்மொழி விதியின் மேவன வெல்லாம்
           நோக்கி மன்ன நுவலருங் காப்பின்
           அணிந்தது நகரெனப் பணிந்தவ ருரைக்கலும்

                    (இதுவுமது)
            81 - 87: மடையரும்...........உரைக்கலும்

(பொழிப்புரை) பின்னரும், மடைத் தொழிலாளரும் பணி மகளிரும் மல்லரும் உழையிருப்போரும் வாயில் காப்போரும் கணக்கரும் பிற காவலரும் உட்பட அரசியல் வினையிற் பிறழாத வழிவழிவந்த இத்தகைய தொழிலாளரை யெல்லாம் அவரவர் தொன்றுதொட்டுச் செய்து வருகின்ற தொழிலின்கண்ணே நிறுத்தி வைத்து மேலும் அரசன் கட்டளைக்கண் அமைந்தவற்றை யெல்லாம் செய்து நன்கு பார்வையிட்டு அரசன்பால் வந்து வணங்கிப் 'பெருமானே! கட்டளைப்படி கூறுதற்கரிய வலிய காவலோடு குஞ்சரச்சேரி மாளிகை அணி செய்யப்பட்டது' என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) மல்லர்-உடம்பு தடவி நீராட்டுந் தொழிலாளர். 'மல்லர் புல்லிக் கமழுநீ ராட்டினாரே' (2733) எனச் சிந்தாமணியினும் வருதல் காண்க. கடையர் - வாயில் காவலர். காப்பர் - பிற காவற் றொழிலாளர். இறைவினை-அரசியல் வினை. நிறீஇ-அமைத்து. வாய் மொழி என்றது அரசன் கட்டளையை. நகர் அணிந்தது மாளிகை அணியப்பட்டது. அவர் - கணக்கரும், காவலரும்.  


     முந்தை யுணர்ந்தோர் வந்துநினக் குரைப்ப
     170   யாமுங் காண்கங் கூமின் சென்றெனக்
          கோல்கொண் மள்ளர் காலி னோடி
          நம்பி வேஎண் மம்பி வருகென
          ஆணையிற் றிரீஇய ரஞ்சன்மி னீரெனத்
          தோணி யிழிப்புழித் துடுப்புநனி தீண்டி
     175   நெற்றி யுற்ற குற்ற மிதுவெனனன

                  (இதுவுமது)
             169 - 175 : முந்தை..........இதுவென

(பொழிப்புரை) இச்செய்தியை முற்பட அறிந்தோர் நின்பால் வந்து நினக்குக் கூறியதனாலே அங்ஙனமாயின் அவளை யாமும் காண்போம் விரைந்து சென்று அத்தோணியைக் கரைக்கே மீண்டும் அழைமின்! என்று நீ கட்டளை யிட்டருள நின் ஏவலராகிய பிரப்பங்கோல் ஏந்திய மறவர் காற்றெனக் கடுகி வந்து அவையோர் ஆணைக்கு மாறுபட்டு நடத்தற்கு அஞ்சாதே கொண்மின்! நம்மன்னன் மகனாகிய உதயண நம்பி இவளைக் காண்டற்கு விரும்புகின்றனன். தோணியைத் திருப்பிக் கொடுவாருங்கோள்! என்று கூற அதுகேட்ட தோணியியக்குநர் அதனை மீட்டுக் கொணர்ந்து அதனினின்றும் என்னை நின் திருமுன்னர் இறக்கிய பொழுது அத்தோணித்துடுப்புக்கடிதிற் புடைத்தமை யானே என் நெற்றியிற் பட்ட புண்ணாலாய வடுவிது வாகும் என்று (தன் னெற்றியில் வடிவினைக் காட்டிப் பின்னர்) என்க.

(விளக்கம்) முந்தை - முற்பட, காண்கம் - காண்பேம், கூமின் - கூவுமின், அழைமின், மள்ளர் - மறவர், நம்பிவேண்ம் - நம்பி விரும்புவான். துடுப்பு - வலிக்குங்கருவி, குற்றம் - வடு, அரங்கூறவையத்தோர் ஆணையின் திரிதற்கு அஞ்சன்மின் என்றவாறு. ஆணையிற்றிரிதலாவது, அவனை நீரில் வீழ்த்தாமல் மீண்டு வருதல்.


 விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை
          புரிந்துட னயரும் பொலிவின தாகி
          மல்லன் மூதூ ரெல்லாச் சேரியும்
          பயிர்வளை யரவமொடு வயிரெடுத் தூதி
     5    இடிமுர செறிந்த வெழுச்சித் தாகி
          யாழுங் குழலு மியம்பிய மறுகின்

        (எழுச்சியார வாரம்)
         1 - 6 :  விரைந்தனர்.........மறுகின்

(பொழிப்புரை) இவ்வாறு உஞ்சை மாநகரத்தோர் விரைந்து மேற்கொண்ட விரிந்த நீராட்டு விழாவின் பொருட்டு அந் நகரத்தே மேற்கொண்ட யாத்திரையானது எல்லோரும் பெரிதும் விரும்பி ஒருங்கே செய்யுமொரு பொலிவினையுடையதாகி அவ் வளமுடைய உஞ்சை நகரத்தே யமைந்த எல்லாச் சேரிகளிடத்தும் முழங்காநின்ற சங்கு முழக்கத்தோடே கொம்புகளையும் உயர்த்தி ஊதி இடிபோன்று முரசத்தை முழக்கிய செலவினையுடையதாகப் புறப்பட்டுச் செல்வோர் வாசிக்கும் யாழும் குழலும் முதலிய இன்னிசைக் கருவிகள் முழங்காநின்ற வீதிதோறும் என்க.

(விளக்கம்) ஆத்திரை - யாத்திரை - புறப்பாடு. எல்லா மக்களும் ஒரே சமயத்திற் புறப்பட்டனர் என்பார் புரிந்து உடன் அயரும் பொலிவினதாகி என்றார். ஆத்திரை பொலிவினதாகி எழுச்சித்தாகி இயம்பிய மறுகின் என்க. பயிர்வளை - முழங்குஞ்சங்கு. வயிர் - ஊதுகொம்பு. வளையும் வயிரும் முரசமும் புறப்படுதற்கு அறிகுறியாக முழங்கின என்றும், புறப்பட்டுப் போவோர் யாழுங் குழலும் இயம்பிச் செல்லாநின்றனர் என்றும் கொள்க.



             ஆடகப் பொற்கவ றணிபெறப் பரப்பிக்
            கூடங் குத்திய கொழுங்காழ்க் கேற்ப
     250    நாசிகைத் தானத்து நகைமுத் தணிந்து
            மாசறு மணிக்கான் மருப்புக் குடமிரீஇ
            அரக்குருக் கூட்டிய வரத்தக் கஞ்சிகைக்
            கரப்பறை விதானமொடு கட்டி லுடையது
            கோதை புனைந்த மேதகு வனப்பின்
     255    மல்லர் பூண்ட மாடச் சிவிகை

              (மாடச் சிவிகையின் சிறப்பு)
             248 - 255 :  ஆடக...........சிவிகை

(பொழிப்புரை) ஆடகப்பொன்னாலியன்ற கைம்மரம்அழகுறப் பரப்பிக் கூடம் என்னும் உள்ளறையின்கண் நடப்பட்ட கொழுவிய தூண்களுக்கேற்ப மூக்கணியின்கண் ஒளி முத்துமாலை அணிந்து குற்றமற்ற மணிகள் பதித்த யானைமருப்பாற் செய்த குடத்தை இருத்தி, உருக்கிய சாதிலிங்கம் வழித்த சிவந்த உருவு திரையாலே மறைத்த இடத்தையும், மேற் கட்டியையும், கட்டிலையும் உடையதும் மலர் மாலைகளாலே அணிசெய்யப்பட்ட மேன்மை தக்கிருக்கின்ற அழகினை உடையதும் மறவராலே காவப்பட்டதும் ஆகிய மாடச் சிவிகை என்னும் ஊர்தியின்கண் என்க.

(விளக்கம்) ஆடகம் பொன் - பொன்னில் ஒரு வகை. கூடம் உள்ளறை. காழ் - தூண். நாசிகை - மூக்கணை. குடம் - ஓருறுப்பு - கரப்பறை - மறைவான அறை. விதானம் - மேற்கட்டி. மல்லர் - மறவர். மாடச்சிவிகை - சிவிகைவகையினுள் ஒன்று.  

             பல்வளை யாயத்துப் பைந்தொடி யேறலும்
            செய்யோ ளமர்ந்த செம்பொற் றாமரை
            வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல
            மெல்லியன் மாதரை யுள்ளகம் புகுத்தி
     260    மல்லற் பெருங்கிளை செல்வழிப் படர

                   (இதுவுமது)
          256 - 260 :  பல்வளை..........படா

(பொழிப்புரை) பலவாகிய வளையலணிந்த தோழியரையுடைய பசிய தொடியணிந்த வாசவதத்தை ஏறியவுடன் வளப்பமுடைய பெரிய சுற்றத்தார் அவ்வாசவதத்தையை, அச்சிவிகை திருமகள் வீற்றிருந்த செவ்விய பொற்றாமரை மலரினது பெரிய இதழான மூடப்பட்ட பொகுட்டைப் போன்று தோன்றும்படி அகத்தே இருத்தித் திருநீர்ப் பொய்கைக்குச் செல்லும் நெறியிலே செல்லா நிற்ப என்க.

(விளக்கம்) பைந்தொடி - வாசவதத்தை. செய்யோள் - திருமகள். வள்ளிதழ் - பெரிய இதழ். கொட்டை - பொகுட்டு. மெல்லியன் மாதரை - வாசவதத்தையை. மல்லல் - வளம். பெருங்கிளை - தாயர் முதலிய சுற்றத்தார்.  

 உழவ ரொலியுங் களமர் கம்பலும்
           வளவய லிடையிடைக் களைகளை கடைசியர்
           பதலை யரியல் பாசிலைப் பருகிய
           மதலைக் கிளியின் மழலைப் பாடலும்
     165    தண்ணுமை யொலியுந் தடாரிக் கம்பலும்
           மண்ணமை முழவின் வயவ ரார்ப்பும்
           மடைவாய் திருத்து மள்ளர் சும்மையும்
           இடையற வின்றி யிரையாறு தழீஇ
           வயற்புலச் சீறூ ரயற்புலத் தணுகி
     170    மருதந் தழீஇய மல்லலம் பெருவழி

                    (இதுவுமது)
            161 - 170 :  உழவர்...............பெருவழி

(பொழிப்புரை) உழவர் பாடும் ஏர் மங்கலப் பாடல் ஒலியும், களத்திற றொழில் செய்வோர் செய்யும் ஆரவாரமும், வளமிக்க வயல்களிடத்தே இடையிடையே முளைக்கும் களைகளைக் களையா நின்ற உழத்தியர் பதலையிற் கொணர்ந்த கள்ளைப் பசிய தாமரை இலைகளைக் குடையாக்கிப் பெய்து பருகிய களிப்பினாலே பாடா நின்ற இளங்கிளிகள் மிழற்றினாற் போன்ற மழலை மொழிகளமைந்த பாடலின் ஆரவாரமும், தண்ணுமை முழக்கமும், தடாரி முழக்கமும், மண் பூசப்பட்ட முழவினையுடைய மறவர் ஆரவாரமும், மடைகளை உடைய வாய்க்கால்களைத் திருத்தாநின்ற மள்ளருடைய ஆரவாரமும், இடையீடின்றி முழங்கா நின்ற ஆற்றினது ஆரவாரத்தோடு இயைந்து பெரு முழக்கமுடைய வயல் நிலமமைந்த சிறிய சிறிய ஊர்களினது பக்கத்தே சென்று அம்மருத நிலத்தைப் பொருந்திக் கிடந்த வளப்பமிக்க அழகிய வழியிலே என்க.

(விளக்கம்) களமர் - களத்திற் றொழில் செய்வோர். களையைக் களைகின்ற என்றறிக. கடைசியர் - உழத்தியர். பதலை - கள்மொந்தை. தடாரி - கிணைப் பறை. இரையாறு : வினைத்தொகை. மல்லல் - வளம்

    ஒருநூற் றிருபத் தோரைந் தெல்லையுள்
           வலப்பா லெல்லை வயல்பரந்து கிடந்த
           அளற்றுநிலைச் செறுவி னகனிலங் கெழீஇ
           இடப்பான் மருங்கிற் பரற்றலை முரம்பிற்
     175    புன்புலந் தழீஇய புகற்சித் தாகி
           வன்றொழில் வயவர் வலிகெட வகுத்த
           படைப்புறக் கிடங்குந் தொடைப்பெரு வாயிலும்
           வாயிற் கமைந்த ஞாயிற் புரிசையும்
           இட்டமைத் தியற்றிய கட்டளைக் காப்பின்
     180    மட்டுமகிழ் நெஞ்சின் மள்ளர் குழீஇய
           அருட்ட நகரத் தல்கூ ணமயத்

                     (இதுவுமது)
           171 - 181 :  ஒருநூற்று..................நகரத்து

(பொழிப்புரை) நூற்றிருபத்தைந்து காவதம் சென்று முடிந்த எல்லையிலே வலப்பக்கத்தே வயல்களே பரவிக்கிடந்த சேறு நிலையுற்ற அக்கழனி நிலத்தையடுத்து இடப்பக்கத்தே பருக்கைக் கற்களையுடைய மேற்பரப்பினையுடைய மேட்டு நிலத்தையுடைய புன்செய்களை அகப்படுத்தியதும் காண்போர்க்கு விருப்பந் தருவதும் ஆகிய போர்த்தொழிலையுடைய பகைமறவர் வலிமை கெடும் பொருட்டு அமைக்கப்பட்ட மதிலைப் புறத்திற் சூழ்ந்த அகழியும் கோபுர வாயிலும் அவ்வாயிலுக்கியைந்த ஞாயிலையுடைய மதிலும் அமைத்து இயற்றப்பட்ட ஆணையையுடைய பாதுகாவலையுடைய கள்ளுண்டு களிக்கும் நெஞ்சினையுடைய மறவர்கள் குழுமிய அருட்ட நகரத்தினை அணுகி என்க.

(விளக்கம்) அளற்றுநிலை - சேற்றுநிலை. பரல் - பருக்கை. முரம்பு - மேட்டு நிலம் புன்புலம் - புன்செய். படை: ஆகுபெயர். தொடைப் பெருவாயில் - கோபுர வாயில். ஞாயில் - ஒரு மதிலுறுப்பு. புரிசை - மதில். மட்டு - கள். மள்ளர் - போர்மறவர். அருட்ட நகரம் - ஒரு நகரம். இஃது உதயணன் பகைவர் நகரம் என்க.
 55    வடுநீங் கமைச்சர் வலித்தன ராகிப்
           பிணைமலர்ப் படலைப் பிரச்சோ தனன்றன்
           இணைமலர்ப் பாவையை இயைந்ததற் கொண்டும்
           ஊக்கம் இலனிவன் வெட்கையின் வீழ்ந்தென
           வீக்கங் காணார் வேட்டுவர் எள்ளிக்
     60    கலக்கம் எய்தக் கட்டழல் உறீஇய
           தலைக்கொண் டனரெனத் தமர்க்கும் பிறர்க்கும்
           அறியக் கூறிய செறிவுடைச் செய்கை
           வெஞ்சொன் மாற்றம் வந்துகை கூட
           வன்கண் மள்ளர் வந்தழல் உறீஇப்
     65    போர்ப்பறை அரவமொ டார்ப்பனர் வளைஇக்
           கோப்பெருந் தேவி  போக்கற மூடிக்
           கையிகந்து பெருகிய செய்கைச் குழ்ச்சியுள்

        {ஏவலர் அரண்மனையில் தீக்கொளுவுதல்}
            55 - 67; வடுநீங்கு..........சூழ்ச்சியுள்

(பொழிப்புரை) குற்றமற்ற அமைச்சர் தாங்கருதிய செயலைச் செய்யத் துணிந்தனராகிப் பகைவராகிய வேடர், உதயண மன்னன் பாவையை மணந்த நாள் தொடங்கிக் காம வேட்கையுள் அழுந்தி ஊக்கமிலன் ஆயினான்; ஆதலின் இவனை வெல்லுதல் எளிதென்றும் அவன் பெருமையைக் கருதாதும் இகழ்ந்து அவன் கலக்கமுறும் பொருட்டு அரண்மனையில் தீக் கொளுவத்தலைப்பட்டனர் என்னும் ஒரு செய்தியைத் தஞ் சுற்றத்தாரும் பிற மாந்தரும் அறியும்படி பரப்பிய கருத்துச் செறிந்த அக்கொடுஞ்சொல் யாண்டும் பரவாநிற்ப, அச்செயலுக்குக் கருவியாயமைந்த தறுகண்மையுடைய மறவரும் அவ்வாறே போர்ப்பறை முழக்கத்தோடே ஆரவாரித்து வந்து அவ்வரண்மனையைச் சூழ்ந்து அதனகத்திருந்த வாசவதத்தை புறம் போகாதபடி அதன் வாயில்களை மூடி அதன்கண் தீக்கொளுவிய வரை கடந்து பெருகிய இச் சூழ்ச்சிச் செயல் நிகழுங்கால் என்க,

(விளக்கம்) 55. தீயச்செயல் போலத் தோன்றுமாத்திரையே;அதனைச் செய்வோர் தூயரே என்பார் வடுநீங்கு அமைச்சர் என விதந்தார்.
    59 - 7. பிணைத்த மலர் மாலையும் தளிர் மாலையும் அணியும் பிரச்சோதனன் மகளாகிய திருமகளை ஒத்த வாசவதத்தையை மணந்த நாள் தொடங்கி என்க. படலை -தளிர்விரவிய மாலை. மலர்ப்பாவை ; திருமகள். அவளை ஒத்த வாசவதத்தை என்க.
    58. ஊக்கமிலன் - தன்வினை செய்தற்கண் மனக்கிளர்ச்சியிலாது மெலிந்தான் என்று கருதி என்க. எனவே இவனை அழித்தல் மிக எளிது என்று எள்ளி அழலிட்டனர் என்று கருதும்படி என்பது கருத்து.
    59. வீக்கம் -பெருமை. எள்ளி-இகழ்ந்து; மதியாமல் என்றவாறு.
    60, உறீஇய - கொளுவ; செய்யிய என்னும் வாய்பாட்டெச்சம்.
    63, அறியும் பொருட்டு அவ் வமைச்சர் கூறிவிடுத்த மாற்றம் என்க. இங்ஙனம் கூறிவிடுத்தது தம் குழ்ச்சி வெளிப்படாமைப் பொருட்டென்க, செறிவுடைச் செய்கை -கருத்துச் செறிவுடைய செயல்; ஆராய்ந்து துணிந்த செயல் என்றவாறு.
    65. ஆர்ப்பனர் - ஆர்த்து. வளைஇ -வளைத்துக்கொண்டு.
    66, கோப்பெருந்தேவி ; வாசவதத்தை.
    67. கையிகந்து-மிக்கு. சூழ்ச்சிச் செய்கையுள் என  மாறுக.
  வல்லே
     60   மாய மள்ளரை ஆயமொ டோட்டி
          உருமண் ணுவாவும் வயந்தக குமரனும்
          பொருமுரண் அண்ணல் புகுதரும் வாயிலுள்
          பொச்சாப் போம்புதல் புரிந்தனர் நிற்ப

          59 - 63 : வல்லே.........நிற்ப

(பொழிப்புரை) பொய்மையையுடைய பகைமறவரைக் கூட்டத்தோடே ஓடும்படி அவருடன் பொய்ப்போர் புரிந்து உருமண்ணுவாவும் வயந்தக குமரனும் அண்ணல் வந்து புகுதற்குரிய வாயிலினிடத்தே அவன் புகுங்கால் உண்டாகும் சோர்வினைத் தவிர்த்து அவனை உய்யக்கோடல் செய்வாராய் விரைந்துவந்து நிற்ப என்க,

(விளக்கம்) 56. வல்லே - விரைந்து
     6o,மாய மள்ளர் - பொய்யாகப் பகைவர் போல வந்து அரண்மலையில் தீக்கொளுவிய மறவர்.  ஆயம் - கூட்டம்,
     62. பொருமுரண் - போர்செய்யும் வலிமை. அண்ணல் ; உதயணகுமரன்.   புகும்பொழுது அவ்வாயிலின்கண் துனப மிகுதியாலே தீயினுட்புகுதலும் கூடும் அன்றே!   அத்தகைய பொச்சாப்பு நேராதபடிபாது காவல் செய்தனராய் நிற்ப என்க.
     63, பொச்சாப்பு - ஈண்டுத் துன்பமிகுதியால் உண்டாகும்  சோர்வு.

      உருமண் ணுவாவின் பெருமுது குரவன்
         அவமில் சூழ்ச்சித் தவறில் தோழன்
    105   பெரும்புனற் கங்கை பெருவளங் கொடுக்கும்
         அங்க நன்னாட் டணிபெற இருந்த
         தெங்குநிகர் இல்ல தெழிற்கிடங் கணிந்தது
         பொங்குமலர் நறுந்தார்ப் புனைமுடிப் பொற்கழல்
    110   அச்சங் கொள்ள ஆடுகொடி நுடங்கிச்
         சத்திக் குடத்தொடு தத்துறல் ஓம்பி
         விளங்குபு துளங்கும் வென்றித் தாகி
         அளந்துவரம் பறியா அரும்படை அடங்கும்
         வாயிலும் வனப்பு மேவிவீற் றிருந்து
    115   மதிலணி தெருவிற் றாகி மற்றோர்க்
         கெதிரில் போக வியல்பமை மரபொடு
         அடுதிறன் மள்ளரும் வடுவின்று காப்ப
         நெடுமுடி மன்னருண் மன்னன் நேரார்
    120   கடுமுரண் அழித்த காய்சின நெடுவேல்
         படுமணி யானைப் பைந்தார் வெண்குடை
         உக்கிர குலத்துள் அரசருள் அரசன்
         விற்றிறல் தானை விசயவரன் என்னும்
         நற்றிறன் மன்னன் நாளுங் காக்கும்
    125   சண்பைப் பெருநகர்ச் சால்பொடும் விளங்கிய

        [சண்பை நகரின் சிறப்பு]
     [103 முதல் 125 ஈறாக ஒரு தொடர்]
    103 - 125 ; உருமண்ணுவா........பெருநகர்

(பொழிப்புரை) முற்கூறப்பட்ட உருமண்ணுவாவின் தந்தையாகிய முனிவருடைய நண்பனும், (119) முடிமன்னருள்ளும் சிறந்த முடிமன்னனும், பகைவர் வலியை அழித்த நெடிய வேற்படையினையும் யானையினையும் கொற்றவெண் குடையினையும் உடையவனும், உக்கிர குலத்துத் தோன்றிய அரசருள்ளும் சிறந்த அரசனும், விரல்லாற்றல் மிக்க படையினையுடையோனும், ஆகிய. விசயவரன் என்னும் மன்னன் வீற்றிருந்து ஆட்சி செலுத்தும் தலைநகரமும், (105) மிக்க பேரியாறு பாய்ந்து பெருவளஞ் செய்யப்பெறுவதும், அவ்வங்க நாட்டிற்கே அழகுதருவதாய் அமைந்திருப்பதும், பிறநாட்டினும் தனக்கு ஒப்பாகும் நகரங்களில்லாததும், அழகிய அகழி சூழ்ந்ததும், வானத்தே இயங்கும் கந்தருவரும் தேவரும் அஞ்சுதற்குக் காரணமான வானுற உயர்ந்து நிற்கும் கொடிகள் ஆடா நிற்பதும், சூலம் நாட்டிய குடங்களோடு தன்பால் வாழ்வோர் துன்பத்தை அகற்றிப் பாதுகாக்கும் புகழான் விளங்கித் திசை தொறும் பரவும் வெற்றிப் புகழையும் உடையதும், எண்ணி எல்லைகாண வியலாத பெரும்படை அடங்கும் வாயிலையும் அழகினையும் மதில்களை அணிந்த தெருக்களையும் உடையவதும் மற்று அப்படைஞர் முதலிய தன்பால் வாழும் மக்கட்கு ஒப்பற்ற இன்பம் நல்கும் இயல்புடையதும் ஆற்றல்மிக்க நால்வகைப்படையானும் காக்கப்படுவதும் ஆகிய சண்பை என்னும் பெயரையுடைய பெரிய நகரத்தே என்க.

(விளக்கம்) 103 - 104. உருமண்ணுவாவின் பெருமுதுகுரவன்  தோழன், என்றது அம் முனிவனே இவர்க்கு அங்குச் சென்றுறைவீர் எனக் கூறச் செல்வாராயினர் என்றுணர்தற்குக் குறிப்பேதுவாய்  நிற்றல் நுண்ணிதினறிக,
    104. அவமில் குழ்ச்சி - வீண்போதலில்லாத முயற்சி, அவமில் குழ்ச்சித்  தவறு இல் தோழன் என்றது அவன் நகரத்தே உறைதலாற்றீங்கு நேராதென்று   அவர் துணிந்து சென்றனர் என்பதற்குக் குறிப்பேதுவாக நிற்றலும் உணர்க.
    107. கிடங்கு - அகழி.
    108 - 109. பெரிய மலர்களானாய நறிய மாலைகளணியப்டட்ட மூடியிலையும்   பொற்கழல் கட்டப்பட்ட அடியினையும் உடைய விச்சாதரரும் தேவகுமரரும் என்க.
    110. இக்கொடிகள் நம்மை ஊறுசெய்யுங் கொல் என்று அச்சங் கொள்ளக் காரணமாக அவர் இயங்கும் வானின்கண் உயர்ந்து நிற்கும் கொடிகள் என்பது கருத்து.
    111. சத்திக்குடம் - சூலம் நடப்பட்ட குடம் (கலசம்).    
    112. துளங்கும் வென்றி - பரவும் வெற்றிப்புகழ்.
    113, அரும்படை - பகைவர் வெல்லுதற்கரிய படை.
    115. தெருவிற்றாகி - தெருக்களை உடையதாய்.
    115. மற்றோர் - அப்படைஞர் முதலிய தன்பால் வாழ்வோர்க்கு.
    117. கொடுஞ்சி - தாமரைப்பூ வடிவமாகச் செய்து தேரின் முன் பக்கத்தே   நடப்படுவதோர் உறுப்பு.
    120. கடுமுரன் - கடிய வலிமை
    121. படுணி - ஓசைபடும் மணி
    122, உக்கிரகுலம்-ஐம்பெருங் குலத்துள் ஒன்று. அக்குலத்தே தோன்றிய அரசருள்ளும் சிறந்த அரசனாகிய என்க.
    124. நற்றிறல் - அரசற்கோதிய நல்ல திறமை எல்லாம் அமையப் பெற்ற என்க

  225    பொற்புடைப் புரவி பொலிய வேறி
            நற்படை நலியா நன்மையொடு பொலிந்த
            சாலிகைக் கவயங் கோல மாகப்
            புக்க மெய்யினர் பூந்தார் மார்பிற்
            றாளாண் கடுந்திறல் விரிசிகன் வாழ்கென
     230    மேலாண் மல்லன் பாடி காத்த
            நீலக் கச்சை நிரைகழன் மறவரை
            வேலிற் சாய்த்துங் கோல மான்றேர்

                      (இதுவுமது)
            225 - 232 : பொற்புடை ......... சாய்த்தும்

(பொழிப்புரை) அழகினையுடைய குதிரைகளின் மேல் பொலிவுறும்படி ஏறிப் பகைப் படை தம்மைத் துன்புறுத்தாத நன்மையோடு  பொலிவுடைய சாலிகையாகிய கவசத்தை அழகாக அணிந்த உடலை உடையராய், அழகிய மாலையணிந்த மார்பினையும்,  தாளாண்மையையும், கடிய ஆற்றலையு மு டைய விரிசிக மன்னன் வாழ்க! என்று ஆரவாரித்துக் கொண்டு, தலைவ னாகிய மல்லன் என்பவனுடைய பாசறையைக் காத்திருந்த நீலக் கச்சை யையணிந்த நிரல்பட்ட அணியாகி நின்ற வீரக் கழலணிந்த மறவர்களை வேலால் குத்திச் சாய்த்தும்; என்க.

(விளக்கம்) பொற்புடை - அழகுடைய கலணை. சாலிகையாகிய கவயம் என்க; இருபெயரொட்டு. விரிசிகன் வாழ்க என்று ஆரவாரித்துக் கொண்டு மல்லன் மறவரைச் சாய்த்தனர் என்க. அஃதெற்றுக்கெனின், அங்குள்ளோர் அங்குத் தாக்குபவர் விரிசிகன் மறவர் என்று நினைத்தற்கென்க. நிரை மறவர், கழன் மறவர் எனத் தனித்தனி கூட்டுக. நிரை - அணி. மேலாள் ஆகிய மல்லன் என்க. மேலாள் - அரசன்
       வேலிற் சாய்த்துங் கோல மான்றேர்
            அடவி வாழ்கென வார்த்தன ருராஅய்த்
            தடவரை மார்பிற் றளராச் செங்கோல்
     235    மிலைச்சன் வாழ்கெனத் தலைக்காப் பிருந்த
            தண்ட மள்ளரைத் தபுத்துயி ருண்டும்

                      (இதுவுமது)
             232 - 236 : கோலம் ......... உண்டும்

(பொழிப்புரை) அழகிய குதிரை பூண்ட தேரையுடைய அடவி மன்னன் வாழ்க என்று ஆரவாரித்தவராய்ச் சென்று பெரிய மலை போன்ற மார்பினையுடையவனும், தளராத செங்கோலையுடையவனும்,  ஆகிய மிலைச்சன் என்பான் வாழ்க! என்று, தலைக் காவலாக இருந்த அவன் படை வீர ரைக் கொன்று உயிருண்டும்; என்க.

(விளக்கம்) அடவி - ஓர் அரசன். அடவி வாழ்க என்று மிலைச்சன் மல்லரை உயிருண்டு என்க. தலைக் காப்பு - முதன்மையான காவல் : மெய்க் காவலுமாம்.  
   30    இருநூ றானையு மிராயிரங் குதிரையும்
           அறுநூற் றிரட்டி யடன்மணித் தேரும்
           அறுபதி னாயிர ரெறிபடை மள்ளரும்
           திருமணிச் சிவிகையும் பொருவினைப் படாகையும்
           செங்காற் பாண்டிய நன்று பூண்ட
     35    பைம்பொ னூர்தியும் பவழக் கட்டிலும்
           படாஅக் கொட்டிலும் பண்டிபண் டாரமும்
           கடாஅக் களியானைக் காவலற் கியைந்த
           பணைத்தோட் சிலசொற் பதுமா நங்கைக்
           கமைக்கப் பட்ட வகன்பரி யாளமும்
     40    அன்னவை யெல்லா மந்நிலை நல்கி

                      (இதுவுமது)
                30 - 40 : இருநூறு.........நல்கி

(பொழிப்புரை) இருநூறு யானைகளையும், இரண்டாயிரங் குதிரைகளையும் ஆயிரத்திருநூறு வெற்றியுடைய மணிகட்டப்பட்ட தேர்களையும் அறுபதினாயிரராகிய கொல்லும் படையேந்திய காலாள் மறவர்களையும், அழகிய மணிபதித்த சிவிகைகளையும், போர்த் தொழிலில் உயர்த்தும் கொடிகளையும், சிவந்த கால்களையுடைய எருதுகளை நன்றாகப்பூட்டிய பசிய பொன்னாலியன்ற ஊர்திகளையும், பவழக் கட்டிலையும், கூடாரங்களையும், பண்டி பண்டாரங்களையும் மதக்களிப்பையுடைய யானையையுடைய உதயண மன்னனுக்கு வேண்டியனவும் பணைத்த தோளையும் சிலவாகிய சொற்களையுமுடைய பதுமாபதி நங்கைக் கென்றமைக்கப்பட்டனவும் ஆகிய பரிவாரங்களையும், இவைபோன்ற பிற பொருள்களையும் அப்பொழுதே வழங்கி; என்க.

(விளக்கம்) இராயிரம் - இரண்டாயிரம். அறுநூற்றிரட்டி ஆயிரத்திருநூறு. பொருவினைப்படாகை - போர்த் தொழிலில் உயர்த்துங்கொடி. பாண்டியம் - எருது. படாஅக்கொட்டில் - கூடாரம். படாம் - ஆடை. பண்டி - வண்டி. பண்டாரம் - பல்வேறு பண்டத் தொகுதி. காவலன் : உதயணன். காவலர்க்கு இயைந்தனவும் நங்கைக்கு அமைக்கப்பட்டனவுமாகிய பரியாளம் என்க. பரியாளம் - பரிவாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக